தாஷ்கன்ட்: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் இயற்றப்பட்ட திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை தாஷ்கன்ட் பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, திருக்குறளின் சிறப்புகளையும் அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறள், ஆன்மிகம், தத்துவம் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஞானம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கியதாக பிரதமர் குறிப்பிட்டார். மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் திருக்குறள் உத்வேகத்தை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாஷ்கன்ட் பல்கலைக்கழகம் தனது 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தச் சூழலில், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
திருக்குறள் உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கப்படுவது அந்நாட்டின் அறிவுச் செல்வத்தை மேலும் வளப்படுத்தும் என்றும், இந்தப் பழமையான தமிழ் படைப்புடன் உஸ்பெக் மக்கள் நல்ல தொடர்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தாஷ்கன்ட் பல்கலைக்கழகம் வெறும் பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல், அறிவின் பரந்த உலகை அறிந்துகொள்வதற்கும், அர்ப்பணிப்புடன் கூடிய அறிவுத் தேடலை மேற்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் இடமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
