சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.41 ஆக இருந்த பால் கொள்முதல் விலை, இனி ரூ.44 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். அதில், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, தூத்துக்குடியில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின் தொடரமைப்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.33,066 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மின்பாதைகள் அமைக்கப்பட்டு, தற்போதுள்ள மின்பாதைகளும் வலுப்படுத்தப்பட உள்ளன.
மேலும், தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு மற்றும் திட்ட அறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தயாரிக்கும்.
கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்பட உள்ளது. உலகத் தரத்திலான அலுவலகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் இதில் இடம்பெறும். இதன் மூலம் உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் உயர்தர வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார். சிப்காட் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் உலகத் தரத்திலான ஆராய்ச்சி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
