சென்னையில் 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக திருத்திய பட்ஜெட்டையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத்துக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்துக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழகத்தின் வேளாண் வளர்ச்சியை மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட இணைத் துறைகளையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது அனைத்து தரப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “வளமான தமிழகத்தை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்” என்று முதல்வர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
