டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின் போது போலீசாரின் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) ராஜ்யசபாவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், உள்துறை அமைச்சரை அவைக்கு வரவழைத்து விளக்கம் அளிக்குமாறு அவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட வேண்டும் என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கடந்த ஏழு நாட்களாக இதே விவகாரத்தை எதிர்க்கட்சி தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், அவை தலைவருக்கு இதுபோன்ற உத்தரவை வழங்குமாறு கூறுவதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், “அவை தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்க முடியும்; கட்டளையிட முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். ஒரே பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்ப முடியாது” என கார்கேவை விமர்சித்தார்.
அதோடு, “எதிர்க்கட்சி எந்த விதியையும் மேற்கோள் காட்டவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை; அதற்கு அவர்களின் தலைமைத்துவமே காரணம்” என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதனால் ராஜ்யசபாவில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
