சைவம், வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் தொடர்பாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதுடன், பின்னர் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற விசாரணையில் பொன்முடி நேரில் ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் பொன்முடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
