தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) இடைக்கால தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆணையத்தின் தலைவர் சிவ் தாஸ் மீனா மற்றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிகமாக கலைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்ள 3 பேர் கொண்ட இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பணீந்திர ரெட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நசீர் அகமது மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தக்கர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் வரை அல்லது அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்கள் இந்த இடைக்கால குழு செயல்பட்டு, ஆணையத்தின் அனைத்து அதிகாரங்களையும் பொறுப்புகளையும் கவனிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
