டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களின் உணர்வுகளையும் அச்சங்களையும் சில சுயநல சக்திகள் தங்களது நலனுக்காக பயன்படுத்தி வருவதாக டில்லி பல்கலைக்கழகம் கவலை தெரிவித்துள்ளது.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தாலும், போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் கவலை மற்றும் மனவேதனையை பல்கலைக்கழகம் முழுமையாக புரிந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்குவதற்குப் பதிலாக சிலர் அதை சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்துவது வருத்தமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் முதன்மையாக செய்ய வேண்டியது மாணவர்களின் மன உளைச்சலை குறைத்து, வளாகத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே என பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது. அதன்மூலம் மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
