இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களின் பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த அறிவுரையை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும் சூழலைத் தவிர்க்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சரியான திசையில் அவர்களை வழிநடத்துவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்றும் கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீட் வினாத்தாள் கசிவு தகவல் வெளியான உடனே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் கூட்டத்தில் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க மறுதேர்வு விரைவாக நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் தாமதமின்றி வெளியிடப்பட்டதாகவும் பிரதமர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக கிரண் ரிஜிஜூ கூறினார்.
மேலும், வினாத்தாள் கசிவு என்பது கட்சி அரசியல் தொடர்பான பிரச்சினை அல்ல; அது நாட்டின் நலனைப் பாதிக்கும் விவகாரம் என்பதால், மாநில அரசுகளும் மத்திய அரசும் அரசியல் வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
