காங்கிரஸ் கட்சியின் நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அல்ல; குழப்பத்தை உருவாக்குவதுதான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸ் நடத்திய போராட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அரசின் சார்பில் அமைச்சர் அனுப்பப்பட்டதாகவும், அப்போது பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என்பது காங்கிரஸின் முதல் கோரிக்கையாக இருந்ததாகவும் தெரிவித்தார். அதனை அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், தொடர்ந்து புதிய நிபந்தனைகளை விதித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
மேலும், நீட் தேர்வு மற்றும் மாணவர்களின் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் பயன்படுத்துவதாகவும், பார்லிமென்டில் விவாதம் நடைபெற்றால் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படும் என்பதால் விவாதத்தில் பங்கேற்க தயங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
இளைஞர்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அரசியலாக்காமல், பார்லிமென்டில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்றும், அரசு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அமைச்சர்கள் பதிலளிக்கும்போது கூச்சலிட்டு இடையூறு செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும், காங்கிரசுக்கு தீர்வைவிட குழப்பமே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
