ஸ்ரீரங்கம் கோயில் நிலம் பதிவு செய்யத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுடன் தொடர்புடைய 108 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எந்தவொரு பத்திரப் பதிவும் நடைபெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை நவம்பர் 5 வரை அமலில் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருச்சியைச் சேர்ந்த சம்பத்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கொடியாலம் வாசுதேவ ஐயங்கார் மற்றும் கொடியாலம் சேஷாத்ரி ஐயங்கார் ஆகியோருக்கு இடையே 1887-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மதச் சேவைகள் மற்றும் அறப்பணிகளை நிறைவேற்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆவணங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் மதச் சடங்குகளை நிறைவேற்ற வழிவகை செய்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்குத் தேவையான வருவாயை ஈட்டுவதற்காக திம்மராயசமுத்திரம், அல்லூர், வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 108 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டார். இந்த நிலங்களைத் தனியார் சொத்துகளாகக் கருத முடியாது என்றும், அவற்றின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த நிலங்கள் தொடர்பான விற்பனைப் பத்திரங்களை ஸ்ரீரங்கம், திருச்சி இணை-3, முசிறி மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களிலுள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட நிலங்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது. நிலங்கள் தொடர்பாக எந்தவிதப் பரிவர்த்தனையும் நடைபெறாமல் பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் பத்திரப் பதிவுக்கு நவம்பர் 5 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
