சீன ஊடுருவல் குறித்த போலி ஏஐ வீடியோக்கள்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – கிரண் ரிஜிஜு
புதுடில்லி: இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகக் கூறி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்தார். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். மேலும், சீன ஊடுருவல் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போன்ற மாற்றியமைக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோக்களை மறுத்து இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதில், ரிது சவுத்ரி பகிர்ந்த வீடியோக்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், அவை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிக்கிமில் உள்ள நாது லா கணவாய், இந்தியா–சீனா இடையிலான அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லை வர்த்தகப் பகுதியாகும். அங்கு வணிக வாகனங்கள் வழக்கமாகச் செல்வதைச் சீன ராணுவ ஊடுருவல் எனத் தவறாகச் சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும் ராணுவம் விளக்கியது.
மேலும், ஸ்பியர் கார்ப்ஸ் படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போன்ற வீடியோவும் போலியானது என ராணுவம் தெரிவித்தது. அந்தக் காணொளி 2023 அக்டோபரில் எடுக்கப்பட்டது என்றும், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அவர் அளித்த பேட்டி அது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் அருணாச்சலப் பிரதேசம் குறித்தோ, வீரர்களுக்குத் தளவாடங்கள் மறுக்கப்படுவது குறித்தோ அவர் பேசவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை காங்கிரஸ் பரப்பியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்காக அக்கட்சி நாட்டு மக்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்தச் செயல்பாடு நாட்டின் எதிரிகளின் பிரசாரத்துக்கு உதவுவதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
