“அதிகம் அறிந்துகொள்; அச்சம் குறையும்” – கோவை நூலகப் பதிவேட்டில் முதல்வர் விஜய் பதிவு
கோவை: கோவை காந்திபுரத்தில் ரூ.301.71 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் விஜய், பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை அணிந்து மதியம் 12 மணியளவில் அறிவுலகத்துக்கு வந்தார். அங்கு காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அறிவியல் சாதனங்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்த முதல்வர், அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அரசு பள்ளி மாணவியர் அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளை அவருக்கு விளக்கினர்.
குழந்தைகளுடன் உரையாடிய முதல்வர்
குழந்தைகள் பிரிவுக்குச் சென்ற முதல்வர் விஜய், குழந்தைகளுடன் அமர்ந்து தனது பெயர் விஜய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்து, அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்.
மற்றொரு அறையில் இருந்த ரோபோ அவருக்கு வணக்கம் தெரிவித்தது. அதற்குப் பதிலாக முதல்வரும் வணக்கம் கூறினார்.
பதிவேட்டில் எழுதிய வாசகம்
அறிவுலகத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர், அங்குள்ள பதிவேட்டில் 16.10.2026 என்ற தேதியுடன் தனது பெயரை ஆங்கிலத்தில் ‘C. Joseph Vijay’ எனப் பதிவு செய்தார்.
மேலும், “Know More; Fear Less” என்ற ஆங்கில வாசகத்தையும் எழுதினார். இதன் பொருள், “அதிகம் அறிந்துகொள்; அச்சம் குறையும்” என்பதாகும். அறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த வாசகம் கவனம் பெற்றுள்ளது.
