மதுரை: மதுரையில் போலீசார் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு சிவனடியார் பரமசிவம், 55, உயிரிழந்த வழக்கில், நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். சிவனடியாரான இவருக்கும், வீட்டின் அருகே வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 19-ம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, பரமசிவத்தை தாக்கியதாகவும், அதில் அவர் மயங்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரமசிவம், ஆகஸ்ட் 16-ம் தேதி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போலீசார் தாக்கியதன் காரணமாகவே தனது கணவர் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவரது மனைவி அய்யம்மாள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பரமசிவம் போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், பிரேதப் பரிசோதனைக்கு முன்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்துவது அவசியம் எனக் கூறிய நீதிபதி, சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதித்துறை நடுவரை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி, ஆகஸ்ட் 18-ம் தேதி அரசு மருத்துவமனையில் பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்து, சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று, மரணத்திற்கான காரணம் குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை நிறைவடைந்த பின்னர் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளின் டீன்கள், தங்கள் மருத்துவமனைகளில் பணியாற்றும் மூத்த தடய அறிவியல் பேராசிரியர்களை பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அதன் வீடியோ பதிவை சீலிடப்பட்ட கவரில் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சிந்தாமணி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா அல்லது அவை அகற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் செல்வக்குமாரை நீதிமன்ற கமிஷனராக நியமித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
