நாடியா: மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹூவா மொய்த்ரா தனது தொகுதியில் உள்ள அலுவலகம் முன்பு கடந்த ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் மீது சிலர் முட்டைகள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பின்னர் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவரது பேச்சு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மஹூவா மொய்த்ராவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து கிருஷ்ணநகர் 3-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், மஹூவா மொய்த்ரா நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர் முதலில் நீதிமன்றத்தில் ஆஜரானால் மட்டுமே அந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொல்கத்தா நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மஹூவா மொய்த்ரா ஏற்கனவே மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் தனது பதவியை இழந்திருந்தார்.
