புதுடில்லி: பா.ஜ.க.வின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் நேற்று வெளியிட்டார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மூத்த தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன் தேசிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற நிதின் நபின், கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
தேசிய தலைவராக பொறுப்பேற்று 200 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்சியின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் நியமனத்தை நிதின் நபின் அறிவித்துள்ளார். மொத்தம் 76 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 12 பேர் பெண்கள்.
முக்கிய பொறுப்புகள்
பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்ட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் தொடர்ந்து செயல்படுகிறார்.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே மத்திய அமைச்சர் இவராவார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் தாவ்டே உள்ளிட்ட 8 பேர் தேசிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்மிருதி இரானியின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன் உள்ளிட்ட 16 பேர் தேசிய செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கு மாநிலங்களுக்கான கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. சம்பித் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், இளைஞரணி பிரிவுகளிலும் மாற்றம்
பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக அமித் மாள்வியாவுக்கு பதிலாக சத்தீஸ்காரைச் சேர்ந்த தீபக் மஸ்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கட்சியின் இளைஞரணி தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக குஜராத்தைச் சேர்ந்த ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
