டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் தாயகம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024-ஆம் ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஷேக் ஹசீனா அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும், தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும், ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இதற்கிடையில், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள தனது கட்சியான அவாமி லீக்கின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து தாயகம் திரும்பி, விருப்பத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் போராட்டங்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்த உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த நவம்பரில் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா தொடர்ந்து மறுத்து வருகிறார்.
டிசம்பரில் நாடு திரும்பும் முடிவு குறித்து அவர் கூறுகையில், “நான் திரும்பும்போது என்னைக் கைது செய்யலாம்; ஒருவேளை கொல்லவும் கூடும். இருந்தாலும் நான் என் நாட்டிற்கு திரும்பியே ஆக வேண்டும். என் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். மரணம் வந்தாலும், என் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட என் சொந்த மண்ணிலேயே அது நிகழ வேண்டும்” என்றார்.
