ஜெருசலேம்: ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், தேவை ஏற்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முழுமையாக தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் உருவானதாக கூறப்பட்டது. எனினும், பின்னர் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்று அறிவித்தது. இதனால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஹட்செரிம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை பட்டமளிப்பு விழாவில் பேசிய நெதன்யாகு, கடந்த இரண்டு ராணுவ நடவடிக்கைகளால் ஈரான் பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஏமன் முதல் ஈரான் வரை தங்களது விமானப்படை தாக்குதல் நடத்தும் திறனை உலகிற்கு ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த சூழலையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.
