ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், திருப்பூர் வாய்க்கால் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். அப்போது சனாதன தர்மத்தின் சிறப்பு, ஆன்மிக வாழ்க்கை மற்றும் மனித முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது, மனித தர்மம் குறித்து பல்வேறு மதங்கள் எடுத்துரைத்திருந்தாலும், சனாதன தர்மம் உயர்ந்த வாழ்க்கை நெறியை போதிப்பதாகும் என்றார். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் மற்றும் பாரம்பரிய அனுஷ்டானங்கள் வழியாக தலைமுறை தலைமுறையாக இந்த தர்மம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை முறையாகப் பின்பற்றி, நாட்டின் புண்ணியத் தலங்களின் வரலாறு மற்றும் அவற்றின் ஆன்மிகப் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வாழ்க்கையின் உயர்ந்த இலக்கை தெளிவாக உணர்ந்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்து சமயம் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டது என்றும் சுவாமிகள் தெரிவித்தார்.
உணர்வு, பக்தி, ஆசாரம், தியாகம், ஆன்மிகம், சத்தியம், தர்மம், நல்லொழுக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை சனாதன தர்மத்தின் முக்கிய அம்சங்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், வளர்ச்சி என்பது கட்டடங்கள் அல்லது பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல; மனிதன் மனதளவில் வளர்ந்து, தனது பலவீனங்களை நீக்கி நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதே உண்மையான முன்னேற்றம் என ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் தனது அருளுரையில் வலியுறுத்தினார்.
