நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர் போராட்டம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை வெளியிட்டு, காங்கிரஸ் கட்சி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீசார் தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்துவதாக தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
மேலும், பிரதமரின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், பாதுகாப்பு நடைமுறைகளும் மீறப்பட்டதாக அவர் கூறினார். ஜனநாயக ரீதியிலான விவாதத்தில் பங்கேற்பதற்குப் பதிலாக காங்கிரஸ் அரசியல் நாடகத்தை முன்னிறுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை வழங்குவதோடு, தேர்வு முறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தர்மேந்திர பிரதான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
