முதல்வர் விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சுக்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என்று விஜய் கூறியுள்ளார். அவர் 10 நிமிடம் பேசியிருந்தால், மக்களே அவரை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். அவர் எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை மட்டுமே பேசுவார்; அதற்கு மேல் பேசியிருந்தால் மக்கள் அங்கிருந்து சென்றிருப்பார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், கஞ்சா விற்பனை மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசை குற்றம்சாட்டினார். இவ்விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மேலிடத்திலிருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசியல் குறித்து பேசிய ரகுபதி, திமுக பல்வேறு சோதனைகளை கடந்து ஆட்சிக்கு வந்த இயக்கம் என்றும், எதிர்காலத்திலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் வலிமையை கட்சி பெறும் என்றும் தெரிவித்தார்.
கரூரில் முதல்வர் விஜய் ஆற்றிய பேச்சு ஆணவம் மற்றும் அகங்காரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது என்றும், ஒரு முதல்வருக்கு ஏற்ற பணிவும் பொறுப்பும் அந்தப் பேச்சில் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
அதே நேரத்தில், தமிழக அரசியலில் நிரந்தர கூட்டணிகளோ அல்லது நிரந்தர எதிரிகளோ இல்லை என்றாலும், திமுக அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது என்றும் ரகுபதி கூறினார்.
