பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலம் குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிர்வாகி என கூறப்படும் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பழநி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நில மோசடியில் மேலும் முக்கிய நபர்கள் மற்றும் உயர்மட்ட தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால், வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பழநி அடிவாரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கத்திடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியுள்ளது.
விசாரணையை விரைவாக மேற்கொள்வதற்காக, மதுரை, தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து சிபிசிஐடி பிரிவைச் சேர்ந்த ஐந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக வழக்கு ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பழநி பகுதியில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் பதிவுகள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
