க்யூ.எஸ். (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை 2027 பட்டியலில், இந்திய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டெல்லி ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் ஐந்து இடங்கள் முன்னேறிய அந்த நிறுவனம், 118-வது இடத்தைப் பெற்றுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (QS) நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு 106 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில் டெல்லி ஐஐடி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட நிலையில், ஐஐடி பாம்பே 134-வது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 170-வது இடத்தையும் பெற்றுள்ளன. ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், இந்திய அறிவியல் கழகம் (IISc), டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி குவஹாத்தி மற்றும் ஷூலினி பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
உலக அளவிலான தரவரிசையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (MIT) தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி லண்டன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு மொத்தம் 52 இந்திய கல்வி நிறுவனங்கள் QS தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் 26 நிறுவனங்கள் தங்களது தரவரிசையை மேம்படுத்தியுள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவாகியுள்ளது. வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT) 94 இடங்கள் முன்னேறி 597-வது இடத்தையும், பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (BITS Pilani) 575-வது இடத்தையும் பெற்றுள்ளன.
