பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சென்றடைந்தார். அங்கு இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிறகு, எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரிலிருந்து பாரிஸுக்கு வந்த பிரதமர் மோடியை இந்திய சமூகத்தினர் வரவேற்று வாழ்த்தினர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடி நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, பாரிஸில் கிடைத்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய வம்சாவளியினர் ஆற்றி வரும் பங்களிப்பு பெருமை அளிப்பதாகவும், உலக முன்னேற்றத்திற்கு இந்தியா–பிரான்ஸ் கூட்டாண்மை முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரிஸில் நடைபெறும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் நிகழ்வான விவாடெக் (VivaTech) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தப் பயணம் இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
