இந்தோனேஷியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு மதிய விருந்து அளித்தார். அப்போது இரு நாடுகளின் நட்புறவு, கலாசார உறவு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபோவோ சுபியாண்டோ, “பிரதமர் மோடியின் பணிகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவரது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நான் பின்பற்றுகிறேன் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளித்த பல திட்டங்கள், இந்தோனேஷியாவிலும் நல்ல பலனை அளித்து வருகின்றன” என்றார்.
மேலும், “இந்தியா பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் சில திட்டங்களை எங்களுடைய நாட்டிலும் செயல்படுத்தியதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. நல்ல திட்டங்களுக்கு காப்புரிமை எதுவும் இல்லை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியையும், அவரது குழுவினரையும் வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். இந்த வருகை இரு நாடுகளின் உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
கலாசார உறவைப் பற்றி பேசிய அவர், “எங்கள் மொழியில் 30 முதல் 40 சதவீத சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தவை. எங்கள் மக்களின் பல பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாகவே உள்ளன. இந்தோனேஷியாவின் தேசியச் சின்னமான ‘கருடன்’ கூட இந்திய மற்றும் இந்து புராண மரபுகளுடன் தொடர்புடையதாகும்” என்று தெரிவித்தார்.
மேலும், “வரலாறு இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் ஒன்றிணைத்துள்ளது. எதிர்காலத்திலும் இரு நாடுகளும் வலுவான ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றும் அவர் கூறினார்.
இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் மோடியின் தலைமையையும் வளர்ச்சி திட்டங்களையும் வெளிப்படையாக பாராட்டியிருப்பது அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
