தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீட்டின் மூலம் 1,000 உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இன்று (ஜூலை 7) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போரூரில் செயல்பட்டு வரும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றுக்காக ரூ.1000 கோடி முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முதலீட்டின் மூலம் மாநிலத்தில் 1,000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முதலீடு, தமிழகத்தில் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியையும், திறமையான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் மேலும் அதிகரிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
