ராஞ்சி: ஜார்க்கண்டில் நக்சல் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நக்சல் தலைவன் ஆசிம் மொண்டல் உள்ளிட்ட 6 பேரை பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு மொத்தம் ரூ.1.34 கோடி வெகுமதி வழங்கப்படும் என ஜார்க்கண்ட் போலீசார் அறிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரூ.2.2 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நக்சல் தலைவர்களான மிசிர் பெஸ்ரா மற்றும் ரவிந்திர கன்ஜூ ஆகியோரும் போலீசாரிடம் சிக்கினர்.
இந்நிலையில், மற்றொரு முக்கிய நக்சல் தலைவராகக் கருதப்படும் ஆசிம் மொண்டலை கைது செய்ய உதவும் வகையில் அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்களில் தற்போது இவர் மட்டுமே பிடிபடாமல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆசிம் மொண்டல் உள்ளிட்ட மேலும் 5 பேருக்கும் வெவ்வேறு அளவிலான வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 6 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள வெகுமதிகளின் மொத்த மதிப்பு ரூ.1.34 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேற்கு சிங்பும் பகுதியை விட்டு வெளியேறி, மேற்கு வங்கத்தின் புருலியா அல்லது மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி தயானந்த் குமார் கூறுகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களின் வெளிப்படையான நடமாட்டம் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவர்கள் வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவர்களைப் பற்றிய தகவல்களை வழங்குவோரின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
