சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசு, முந்தைய அரசின் நிலைப்பாட்டை தொடராமல், மாணவர்களின் கல்வி நலனை முன்னிறுத்தி நவோதயா பள்ளிகளைத் திறக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றும், மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மூன்றாவது மொழியையும் தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும், மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதுடன், நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும் உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில், நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
