சென்னை: நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைத்து குடும்பங்களும் பங்கேற்று, துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு உதவும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, குடும்பத்தினர் தங்களது விவரங்களை இணையவழி சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மூலம் பதிவு செய்யும் நடைமுறை ஜூலை 17 முதல் தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்குமாறு பல்வேறு தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கைகளை சேகரிக்கும் பணியல்ல என்றும், மக்கள் வழங்கும் தகவல்களே எதிர்கால அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு அடிப்படையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பமும் சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், இணையவழி சுய கணக்கெடுப்பை பயன்படுத்தி எளிதாக பதிவு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நானும் பதிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்த அவர், பொதுமக்களின் தகவல்கள் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இறுதியாக, “மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு; அனைவரும் ஒன்றிணைந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்” என்று முதல்வர் விஜய் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
