மதுரை: பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கூட்டு சதி ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை சிபிசிஐடி விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சதி செய்து மோசடியாக பதிவு செய்ததாக சார் பதிவாளர் மீது பழநி அடிவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவில், சம்பந்தப்பட்ட ஆவணத்தை பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததால், அந்த உத்தரவின் அடிப்படையிலேயே பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனுதாரர் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே. ராஜசேகர், சிபிசிஐடியை வழக்கில் இணைத்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். பின்னர் நடைபெற்ற விசாரணையில், கோயில் தரப்பு முன்ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அரசு தரப்பில், கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பது தெரிந்திருந்தும், ஆவணத்தை அவசரமாக பரிந்துரைக்கு அனுப்பியதற்கான காரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வாதிடப்பட்டது. மேலும், மனுதாரர் மீது இதற்கு முன்பும் அரசு நிலம் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோயில் தரப்பு, சொத்து தொடர்பாக ஏற்கனவே ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், உரிய விசாரணை நடத்தாமல் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, பதிவு செயல்முறையின் பெரும்பகுதியை முந்தைய சார் பதிவாளர் மேற்கொண்டிருந்தாலும், இறுதிக்கட்ட நடவடிக்கையை மனுதாரர் மேற்கொண்ட விதத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டார். எனவே, இந்த வழக்கில் கூட்டுச் சதி இருந்ததா என்பதை சிபிசிஐடி முழுமையாக விசாரித்து ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரருக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
