சென்னை மெட்ரோ பயணத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புத்தொழில் நிறுவனர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் புதிய தொழில்நுட்ப யோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, போரூர்–பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட அவருடன் தமிழக முதல்வர் விஜயும் பயணித்தார். அப்போது 15க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனர்களைச் சந்தித்த பிரதமர், தமிழகத்தில் மேற்கொள்ளக்கூடிய புதிய தொழில் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
விக்னேஷ் கந்தசாமி என்ற புத்தொழில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தங்களது நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அபாயங்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகப் பிரதமரிடம் விளக்கியதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் சாலைகள் மற்றும் பாலங்களைக் கண்காணிக்க முடியுமா எனப் பிரதமர் கேட்டதாகவும், சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஏரிகளைக் கண்காணிப்பது தொடர்பாகத் தமிழக அரசுடன் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய முயற்சிகள்
மற்றொரு புத்தொழில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சசீந்தர் மாரிமுத்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, அதன் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து பிரதமருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.
விண்வெளித் தொழில்நுட்பத் திட்டங்கள்
மற்றொரு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ரமேஷ் குமார், தங்களது நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் மூலம் நானோ செயற்கைக்கோளைப் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முயற்சி உள்ளிட்ட விண்வெளித் திட்டங்கள் குறித்த விவரங்களைப் பிரதமரிடம் பகிர்ந்ததாகக் கூறினார்.
ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் விளக்கங்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் மோடி கவனமாகக் கேட்டறிந்தார். விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் தங்களது திட்டங்களை விளக்குவதற்காகத் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, தொழில்முனைவோரின் யோசனைகளைக் கேட்டறிந்த பிரதமர், அவர்களுடன் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
