அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் தவெகவில் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆறு பேரில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் முறையே மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏக்களாகப் பொறுப்பேற்றனர்.
இதற்கிடையில், ஆறு பேரின் ராஜினாமா கடிதங்களையும் சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது செல்லாது என்றும், சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.
இந்த வழக்குகளில் மனுதாரர்கள், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது செல்லும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
