இந்தியாவின் வெற்றியால் உலகம் பயன் பெறும்: பிரதமர் மோடி
புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் உலக நாடுகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற புளூம்பெர்க் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், உலகம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று, பிராந்தியப் போர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் உள்ளிட்டவை உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிசக்தி, கனிம வளங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உலக நாடுகளுக்கு இடையிலான அழுத்தங்களுக்கான கருவிகளாக மாறி வருவதாகவும் அவர் கூறினார். இத்தகைய சூழலில், நம்பகமான விநியோக அமைப்புகளையும் புதிய சிந்தனைகளையும் உருவாக்குவது அவசியம் என வலியுறுத்தினார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட இயற்கை எரிபொருள் அல்லாத மின் உற்பத்தி ஆதாரங்களின் திறனை அதிகரிப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தின் நலனுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் பயன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பம், தரவு, அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை ஒரு சிலரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் பயன்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசின் நோக்கம் குடிமக்களை அரசாங்கத்தைச் சார்ந்திருக்கச் செய்வதல்ல; அவர்களை வலுப்படுத்தி அதிகாரமளிப்பதே எனக் கூறிய மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், பிற நாடுகளும் தங்களுக்கான டிஜிட்டல் அமைப்புகளை உருவாக்கிக்கொள்ள இந்தியா தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உருவாக்கப்பட்ட கோவின் (CoWIN) தளம் இதற்கு ஓர் உதாரணம் என்றும் தெரிவித்தார்.
இந்தியா தனது திறன்களை அதிகரித்துக்கொள்ளும் ஒவ்வொரு முன்னேற்றமும் உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் வெற்றி உலகிற்குப் புதிய வாய்ப்புகளையும் வளர்ச்சிக்கான பாதைகளையும் உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
