புதுடில்லி: தெலுங்கானாவின் நல்சார் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் இந்திய பார் கவுன்சில் தலையிட்டதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு பட்டதாரிகளை மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதை நிறுத்தி வைக்க இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரித்தது.
மாணவர்கள் போராட்டம்
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை 2026ஆம் ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களை மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யக்கூடாது என இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை வெளியிட்டது.
எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த சுற்றறிக்கை சில மணி நேரங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது.
தலைமை நீதிபதி கேள்வி
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், பார் கவுன்சிலின் நடவடிக்கை தேவையற்றது எனக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் விவகாரத்தில் தலையிட இந்திய பார் கவுன்சிலுக்கு என்ன உரிமை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தானும் ஒரு காலத்தில் தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவராக இருந்ததாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இது தமக்கும் மாணவர்களுக்கும் இடையேயான விவகாரம் என தெரிவித்தார்.
மேலும், நல்சார் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய பார் கவுன்சில் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பதிலளிக்கும்படி அதற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
