மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கோவில் நிதியில் இருந்து எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யக் கோரி மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மலையை அளவீடு செய்து, பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மீண்டும் அளவீடு
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில் சில இடங்களில் மாறுபாடுகள் இருப்பதாக தெரிந்ததால், ஆகஸ்ட் 5ஆம் தேதி மீண்டும் அளவீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், அளவீட்டு விவரங்களை ஒப்பிட்டு சரிபார்ப்பதற்காக லண்டன் பிரிவி கவுன்சில் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான ஆவணங்கள் மாநில ஆவணக் காப்பகத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த ஆவணங்கள் கிடைத்ததும் அவற்றை ஒப்பிட்டு முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞர் கட்டணம் குறித்து கேள்வி
இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர்களுக்கு கோவில் நிதியில் இருந்து எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், வழங்கப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்து தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், எதிர்வரும் கார்த்திகை தீபத் திருநாளுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
