கோஹிமா: ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும், தேசபக்தி உணர்வை கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது என்றும் நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த உத்தரவுக்கு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
🇮🇳 தேசபக்தியை கட்டாயப்படுத்த முடியாது
நாகாலாந்து பாப்டிஸ்ட் திருச்சபை கவுன்சில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் தேசியச் சின்னங்கள், தேசபக்தி உணர்வுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை திருச்சபைகள் கூட்டமைப்பு முழுமையாக மதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தேசபக்தி உணர்வை கட்டாயப்படுத்தி வெளிப்படுத்தச் செய்வதை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சுதந்திரம், சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும், தேசிய ஒற்றுமையை ஒரே மாதிரியான தன்மையுடன் ஒப்பிடக்கூடாது என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம்
ஒருவர் தேசபக்தியை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வைத்து, அவருக்கு நாட்டின் மீது இருக்கும் அன்பை அளவிட முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு நம்பிக்கைகள், கலாசாரங்கள், மொழிகள், மரபுகள் மற்றும் சிந்தனைகள் நாட்டின் தனித்துவமான அடையாளங்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு சமூகங்களுக்கு தேசியச் சின்னங்கள் மற்றும் நடைமுறைகள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம் என்பதால், அரசு மற்றும் பொது நிறுவனங்கள் நிதானத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எனவே, ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்கக் கூடாது என நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
