மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியா உலகிற்கு வழிகாட்டும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையை மனித குலம் கட்டாயம் பின்பற்றும் நிலை உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி அறிய வருபவர்கள், அந்த அமைப்பின் பணிகளை பாராட்டுவதாக மோகன் பாகவத் தெரிவித்தார். மேலும், தங்களது நாடுகளின் இளைஞர்களுக்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் நல்ல குணநலன்களை உருவாக்குவது மட்டுமல்ல என்றும், இந்தியாவை உலகிற்கு வழிகாட்டும் வலிமைமிக்க நாடாக மாற்றுவதும் அதன் இலக்குகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா பொருளாதாரம், பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகிய துறைகளில் முன்னேறினால் மட்டுமே உலக நாடுகள் இந்தியாவின் பாதையை பின்பற்றும் சூழல் உருவாகும் என்றார்.
மேலும், தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்வதே ஒவ்வொரு சுயம்சேவகரின் கடமை என்றும், தொடர்ச்சியான முயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையின் மூலமே அந்த இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார். இந்தியா உலகிற்கு முன்மாதிரியாக திகழ வேண்டுமெனில், ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் உயர்ந்த பண்புகளையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
