சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டபூவதி கிராமத்தில் உள்ள பசவனசுவாமி மற்றும் மண்டு மாரியம்மன் கோவில்களை, இரு தரப்பினருக்கிடையேயான மோதலைத் தொடர்ந்து கடந்த 2025 ஏப்ரல் 12 அன்று மூடுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராஜ் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்கள் வழிபாட்டிற்காக நிறுவப்பட்ட கோவில்களை எந்த சூழலிலும் மூடக் கூடாது என்று தெளிவுபடுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணமாகக் கொண்டு கோவிலை மூடுவது, அந்த நிலையை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். நீண்டகாலமாக பிரச்சினை நீடித்தால், இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்படும் வரை ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்தை தற்காலிகமாக ஏற்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
