மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12 ஆண்டுகளில் ‘மேக் இன் இந்தியா’ உலகளாவிய பிராண்டாக வளர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்கள், வாகனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உலக சந்தைகளில் வலுவான இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உரையின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய பழங்குடியின மக்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, இந்தியா–ஆஸ்திரேலியா உறவு கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக கூறினார். இந்த முன்னேற்றத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் அவர் பாராட்டினார்.
மெல்போர்ன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்திய கலாசாரம் வேரூன்றியிருப்பதையும், இந்திய பாரம்பரியம், கலை, உணவு மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நகரின் பன்முகத்தன்மையை மேலும் செழுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ககன்யான் திட்டம், சொந்த விண்வெளி நிலையம், 6ஜி தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு எதிர்கால திட்டங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் கூறினார்.
மேலும், இந்தியா தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய 5ஜி சந்தையாக இருப்பதுடன், உள்நாட்டில் உருவாக்கப்படும் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
போக்குவரத்து துறையில் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், தினமும் சுமார் 1.25 கோடி மக்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். நமோ பாரத் மற்றும் வந்தே பாரத் ரயில் திட்டங்கள் நாட்டின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உலக சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கும் மனிதாபிமான உதவிகள் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்படுவதாகவும், அதனால் இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா 2030 காமன்வெல்த் போட்டி மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான கல்வி, புதுமை, வர்த்தகம் மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்புகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
