தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு அமெரிக்காவிலும் விரிவடைந்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் 10 முக்கிய நகரங்களில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் நியூ ஜெர்சி தமிழ் பேரவை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார். இதற்கு முன்பே நியூ ஜெர்சியில் தொடங்கப்பட்டிருந்த ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு தற்போது சிகாகோ, மிச்சிகன், பாஸ்டன், வர்ஜீனியா, அட்லாண்டா, பே ஏரியா, சான் அன்டோனியோ, டல்லாஸ் மற்றும் அரிசோனா உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருவதுடன், அங்குள்ள ஆதரவாளர்களை அண்ணாமலை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அமெரிக்க நகரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் வரும் ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலை பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். அதற்கு முன்பாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் 20 லட்சம் உறுப்பினர்களை இணைக்கும் இலக்குடன் தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
