மெல்போர்ன்: தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மூன்று முக்கிய பழங்கால கோவில் சிற்பங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது, இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவுக்கு திருப்பி அளிக்கப்பட உள்ளவை, திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிலை, நந்தி கற்சிலை, மற்றும் கார்த்திகேயன் (முருகன்) கற்சிலை ஆகியவை ஆகும். இவை அனைத்தும் தமிழகத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அரிய தொல்லியல் சின்னங்களாகும்.
பத்ரகாளி அம்மன் சிலை:
திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமான இந்த சிற்பம், 13 முதல் 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மனை குறிக்கும் இந்த திரிசூலம், சைவ சக்தி மரபில் பாதுகாப்பு, தீமையை அழித்தல் மற்றும் தெய்வீக ஆற்றலின் அடையாளமாக விளங்குகிறது.
நந்தி கற்சிலை:
கொல்லுமாங்குடி ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான இந்த நந்தி சிலை, சிவபெருமானின் வாகனமான நந்தியை பிரதிபலிக்கிறது. சோழர் காலக் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம், தமிழ் சைவக் கோவில் மரபின் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
கார்த்திகேயன் (முருகன்) கற்சிலை:
மானம்பாடி நாகநாதசாமி கோவிலுக்குச் சொந்தமான இந்த ஆறு முகங்களைக் கொண்ட கார்த்திகேயன் சிலை, ஞானம், வீரம் மற்றும் தெய்வீகப் பாதுகாப்பின் அடையாளமாக விளங்குகிறது. ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோவிலில் இருந்த இந்தச் சிலை, சோழர் காலச் சிற்பக்கலையின் நுணுக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த அரிய பாரம்பரியச் சிலைகள் இந்திய தொல்லியல் துறையிடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கை, இந்தியாவின் கலாசார பாரம்பரியச் சொத்துகளை மீட்டெடுக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
