புதுடில்லி: சென்னை – மேற்கு வங்கத்தின் ஹவுரா இடையிலான முக்கிய ரயில் வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், அமைச்சரவையில் பரிசீலிக்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களில் நான்கு ரயில்வே திட்டங்கள் என்றும், ஒரு திட்டம் நெடுஞ்சாலை தொடர்பானது என்றும் தெரிவித்தார்.
ஹவுரா – சென்னை இடையிலான முக்கிய ரயில் வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது அவற்றில் முக்கிய திட்டமாகும். அதேபோல், கட்டாக் – பாரதீப் வழித்தடத்தில் கூடுதலாக மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைத்து, அதனை நான்கு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பீகாரின் முசாபர்பூர் முதல் சீதாமர்ஹி வழியாக நேபாள எல்லைக்கு அருகிலுள்ள சோன்பர்சா வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து ரூ.13,041 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி – கூடூர் வழித்தடம்
சென்னை – ஹவுரா வழித்தடத்தின் ஒரு பகுதியாக, ஆந்திரா – தமிழக எல்லையில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழி ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
தற்போது இந்த வழித்தடம் இரு வழிப்பாதையாக உள்ளது. இப்பகுதியில் இயந்திரம், ஆட்டோமொபைல், மருந்து, ரசாயனம் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் சார்ந்த தொழில்கள் வேகமாக வளர்ந்து வருவதால், கூடுதல் ரயில் பாதை அமைப்பது தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ரூ.2,229 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் ஸ்வர்ணமுகி ஆற்றின் குறுக்கே 360 மீட்டர் நீளமுள்ள மெகா பாலம் அமைக்கும் பணியும் அடங்கும்.
நான்கு வழி ரயில் பாதை அமைக்கப்பட்டால் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். சரக்கு போக்குவரத்து சீராக நடைபெறுவதுடன், ரயில் பாதை பராமரிப்புப் பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இந்த திட்டங்களின் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
