சண்டிகர்: உலகளாவிய சவால்களை திறம்பட சமாளிக்கும் வலிமையான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
உரையின்போது, ஜிந்த் பகுதி வரலாறு, வீரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த மண்ணாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்திய ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தார்.
20-ஆம் நூற்றாண்டு டீசல் மற்றும் மின்சார ரயில்களின் காலமாக இருந்த நிலையில், 21-ஆம் நூற்றாண்டில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்கள் புதிய மாற்றத்தை உருவாக்கி வருவதாக அவர் கூறினார். தற்போது இந்திய ரயில்வேயில் 99 சதவீத பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் எரிபொருள் சார்ந்த சவால்களை சமாளிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்காசியப் பகுதியில் போர் நிலை ஏற்பட்டபோதும், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், பல்வேறு நெருக்கடிகளுக்கும் இந்தியா திறம்பட பதிலளித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் திறனை உலகிற்கு வெளிப்படுத்துவதாகவும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குச் சென்ற தனது பயணம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அந்த நாடுகளுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து வீரர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் இளைஞர்கள் அதிக பயன் அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
