சென்னை: 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த, தமிழக மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி அவசியம் பங்கேற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆரிப் முகமது கான் அர்லேக்கர் (Governor Arlekar) அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரப்பூர்வமான கொள்கை வகுப்பு, திறமையான நிர்வாகம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக துல்லியமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதி தொடர்பான தகவல்களை சேகரிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக சுயவிவர (Self Enumeration) கணக்கெடுப்பு ஜூலை 18 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களே பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாய்ப்பை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், சுயவிவர கணக்கெடுப்பை மேற்கொள்ளாத குடும்பங்கள், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் வீடு வீடாகச் செல்லும் கணக்கெடுப்பின் போது அதிகாரிகளால் பதிவு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசியப் பொறுப்பாக கருதி, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு வலுவான தரவுத்தளம் உருவாகும் என்றும் ஆளுநர் அர்லேக்கர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
