ஜிந்த் (ஹரியானா): இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17) ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் நகரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில், டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள இன்டிகிரல் கோச் ஃபேக்டரி (ICF)-யில் ரூ.118 கோடி செலவில் நாட்டிலேயே இந்த அதிநவீன ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த ரயில், ஹரியானாவின் ஜிந்த்–லலித் கேரா மற்றும் ஜிந்த்–சோனிபட் வழித்தடங்களில் பல்வேறு சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது. லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில், 10 பெட்டிகளுடன் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை இயக்கி பரிசோதிக்கப்பட்டது.
இந்த ரயிலில் சுமார் 2,600 பயணிகள் பயணிக்க முடியும். வழக்கமான சேவையில், மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹைட்ரஜன் ரயில், டீசலுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துவதால், கரியமில வாயு உள்ளிட்ட மாசுபடுத்தும் புகை வெளியிடாமல் தூய்மையான நீராவியை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதோடு, வழக்கமான ரயில்களை விட சத்தமும் அதிர்வும் மிகவும் குறைவாக இருக்கும்.
இந்த சேவையின் தொடக்கத்துடன், ஜெர்மனி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
