மெல்போர்ன்: அரசு முறைப் பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா–ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை வரவேற்றதுடன், ‘வந்தே மாதரம்’ இசை நிகழ்ச்சி, தபேலா மற்றும் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய டிட்ஜெரிடூ இசைக்கருவி நிகழ்ச்சி, கதக் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்த பிரதமர் மோடி, பின்னர் தொழில்முனைவோர் மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவின் வேகமான வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. இரு நாடுகளும் இணைந்து எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையான கூட்டாண்மையை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.
மேலும், உற்பத்தி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலக முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனம் இந்தியாவில் ரூ.3,300 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது. இதனை வரவேற்ற பிரதமர் மோடி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், இந்த முதலீடு இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
