வாஷிங்டன்: ஈரானுடனான பதற்றம் தொடரும் நிலையில், தேவையான சூழல் ஏற்பட்டால் அந்நாட்டுக்கு எதிராக மேலும் ஒரு சுற்று ராணுவத் தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோதல்கள் நீடித்தால் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றார். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மிகவும் தீவிரமானது என்றும், தேவைப்பட்டால் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய டிரம்ப், அதற்கு பதிலடியாகவே அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார்.
மேலும், ஈரானின் இலக்கு பட்டியலில் தனது பெயர் இருப்பதாகக் கூறிய அவர், அத்தகைய மிரட்டல்கள் தன்னை அச்சுறுத்தாது என்றும், அமெரிக்க அதிபராக தனது கடமையை தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று வலியுறுத்திய டிரம்ப், அணு ஆயுதம் கிடைத்தால் அது பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் கூறினார்.
அதேவேளை, எண்ணெய் விலை நிலவரம் விரைவில் சீரடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
