சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார் முதல்வர் விஜய். இந்த பயணத்தின் போது, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் மற்றும் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்.
அதன்பின், மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யும் எவர்கிரீன் கோதாரி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வெண்ணெய்மலையில் உள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்கிறார். மேலும், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
