காந்திநகர்: இந்தியாவின் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருளை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும், அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 10 வழித்தடங்களில் சோதனைத் திட்டங்கள் நடைபெற்று வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைப்பதற்கும் ஹைட்ரஜன் எரிபொருள் முக்கிய மாற்று சக்தியாக உருவெடுத்து வருவதாக கூறினார்.
மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் தொழில்நுட்பங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், தொழில்நுட்ப திறன் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடாக உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், கிரேட்டர் நொய்டா–டெல்லி–ஆக்ரா, புவனேஸ்வர்–கோணார்க்–புரி, ஆமதாபாத்–வதோதரா–சூரத், சாஹிபாபாத்–பரிதாபாத்–டெல்லி, புனே–மும்பை, ஜாம்ஷெட்பூர்–கலிங்கா நகர், திருவனந்தபுரம்–கொச்சி, கொச்சி–எடப்பள்ளி, ஜாம்நகர்–ஆமதாபாத் மற்றும் விசாகப்பட்டினம்–பய்யாவரம் உள்ளிட்ட 10 வழித்தடங்களில் முன்னோடி சோதனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தூய்மையான மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
