மதுரை: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க தடையில்லை. இருப்பினும், அந்த பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே; நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டே அவை அமலும் பெறும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில துணைச் செயலர் சீனி அகமது உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கருணை பணி நியமன வழிகாட்டுதல்கள் இவ்விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்றும், இதனால் சமநீதி மற்றும் சமவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
மேலும், கும்பகோணம் மகாமகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, தர்மபுரி பேருந்து எரிப்பு, கள்ளக்குறிச்சி சாராய விபத்து உள்ளிட்ட பல சம்பவங்களில் அரசு பணி வழங்கப்படாத நிலையில், கரூர் சம்பவத்திற்கு மட்டும் அரசு பணி வழங்குவது எதிர்காலத்தில் முன்னுதாரணமாக அமையும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுபோன்ற சூழல்களில் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கமளித்தார்.
விசாரணையின்போது, “இது அரசியல் மேடை அல்ல; நீதிமன்றம். கவனமாக வாதங்களை முன்வைக்க வேண்டும்” என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இறுதியில், திட்டமிட்டபடி அரசு பணி நியமன ஆணைகளை வழங்கலாம் என்றும், ஆனால் அந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அவை தொடரும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், பணி நியமனம் பெற்றவர்கள் முதல் மாத சம்பளம் பெறுவதற்கு முன்பாகவே வழக்கை விசாரித்து முடிக்கப்படும் என்றும், கருணை அடிப்படையிலான பணி நியமன விதிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) உறுப்பினர் செயலரை எதிர்மனுதாரராக நீதிமன்றம் தானாகவே இணைத்தது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
