திருவனந்தபுரம்: உஸ்பெகிஸ்தானில் மருத்துவம் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி சாவர்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த் – மினி தம்பதியரின் மகளான 21 வயது சாவர்யா, உஸ்பெகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
அதே கல்லூரியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது சாதருல் அனாம் என்பவரும் பயின்று வந்தார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த 3-ஆம் தேதி சாவர்யா கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உஸ்பெகிஸ்தான் சென்றனர்.
விசாரணையில், மாணவியை மதம் மாற வற்புறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் லேப்டாப்பால் தாக்கி கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சாதருல் அனாமை உஸ்பெகிஸ்தான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் விமானம் மூலம் ஆலப்புழாவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவரது இல்லத் தோட்டத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக சாதருல் அனாம் மீது ஹரிப்பாடு போலீசிலும் சாவர்யாவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
